இலங்கையில் கொரோனாவால் மரணிக்கும் சிறுபான்மை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்கும் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அமைதி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
மலையக சிவில் அமைப்புகளின் கூட்டமைப்பு இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது.
‘இலங்கை அரசே! கொரோனாவால் மரணிக்கும் சிறுபான்மை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் உரிமையை உறுதிப்படுத்து!’ எனும் தொனிப்பொருளில் இந்த அமைதி ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மஸ்கெலியா, நுவரெலியா, நானுஓயா, தலவாக்கலை, கொட்டகலை, ஹட்டன், நோர்வூட், பொகவந்தலாவ, சாமிமலை போன்ற நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கை அரசியலமைப்பின்படி எல்லா மதத்தினருக்கும் சகல மத உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும், கொரோனாவால் மரணிக்கும் நபர்களுடைய சடலங்களை எரிப்பதற்கும், புதைப்பதற்குமான ஆலோசனைகளை உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்துள்ளதாகவும் மலையக சிவில் அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.டி. கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.
மலையக சமூகம் என்ற வகையில், அரசாங்கத்தின் இந்த நடைமுறைக்கு தாம் பாரிய எதிர்ப்புகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும், அரசாங்கம் உடனடி தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் மலையக சிவில் அமைப்புகளின் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.