July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தேர்தலில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள்’

வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு தேர்தல்களில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் புதிய நடைமுறையொன்றைத் தயாரிப்பது குறித்து தாம் கவனம் செலுத்தி வருவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்கள் தொழில்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களின் பெயர்கள் வாக்காளர் இடாப்பில் உள்ள போதிலும், அவர்களால் வாக்களிக்க முடியாத நிலைமை தொடர்வதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தல்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் வாக்களிப்பதற்கான புதிய நடைமுறைகளை புதிய தெரிவுக் குழுவொன்றின் மூலம் தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அத்துடன் வைத்தியர்கள், சுகாதாரப் பிரிவினர், ஊடகவியலாளர்கள், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளர்கள், சிறைக்கைதிகள் உள்ளிட்டோருக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானோர் தேர்தல் தினத்துக்கு முன்னரே வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் நடைமுறைகளை சட்டத்தில் உள்வாங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த நடைமுறைகளை செயற்படுத்துவது குறித்து பாராளுமன்றத்தின் கருத்து கோரப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.