November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சிங்கள- பௌத்த மக்களை அரசுக்கு எதிராக திசை திருப்பும் எதிரணியின் முயற்சி பலிக்காது’

தமது அரசாங்கத்துக்கு எதிராக பௌத்த-சிங்கள மக்களை திசை திருப்பும் எதிர்க்கட்சியினரின் முயற்சி வெற்றியளிக்காது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பௌத்த தேரர்களின் ஆசீர்வாதத்துடனும் சிங்கள-பௌத்த மக்களின் பெரும்பான்மை ஆதரவுடனுமேயே தாம் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு சில பௌத்த தேரர்களினதும், குறிப்பிட்ட ஒரு தரப்பு மக்களினதும் விமர்சனங்களைக் கொண்டு ஒட்டுமொத்த சிங்கள-பௌத்த மக்களையும் தமக்கு எதிராகத் திசை திருப்பும் முயற்சியில் பிரதான எதிர்க்கட்சியினர் களமிறங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் நடத்திய கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் பேராதரவுடனும் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடனும் வெற்றிபெற்ற தமது அரசாங்கம் யாருக்கும் அடிபணியாது என்றும் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருந்த நாரஹேன்பிட்டி அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தலைமையிலான குழுவினர் கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

அரசு வழி மாறிப் போகின்றது எனவும், தன்னைக் கவர்ந்திழுக்கும் சிலரை மட்டும் ஜனாதிபதி நம்புகின்றார் எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இதனிடையே, அண்மையில் நடைபெற்ற மஹர சிறைச்சாலை கலவரத்தில் கொல்லப்பட்ட சிங்களக் கைதிகளின் குடும்பத்தினர் வீதியில் இறங்கி பல தடவைகள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த விடயங்களை முன்னிலைப்படுத்தி சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினரும் தமது ஊடகவியலாளர் சந்திப்புக்களில் ‘இது தோற்றுவிட்ட அரசு’ என்றும், ‘அரசின் அழிவு ஆரம்பம்’ என்றும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் இந்தப்  பதில் கருத்துக்கள் வந்துள்ளன.