July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேல் மாகாணத்தில் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா: இலங்கையின் இன்றைய நிலவரம்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 579 பேர் இன்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 38,638 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 582 பேர் இன்றைய தினத்தில் குணமடைந்து சிகிச்சை நிலையங்களில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக கொவிட் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29,882 ஆக உயர்வடைந்துள்ளது.

உயிரிழப்பு 184 ஆக உயர்வு

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இன்று மாலை அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

களுத்துறை தெற்கு பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த 21 ஆம் திகதி அவரின் வீட்டில் உயிரிழந்துள்ளார்.

பிரேதப் பரிசோதனையில் இவருக்கு கொரோனா தொற்று இருந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் இதுவரையில் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று

மேல் மாகாணத்தில் இதுவரையில் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவின் புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு மாவட்டத்தில் 15,875 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 8183 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 2876 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் கண்டி மாவட்டத்தில் 1,394 பேருக்கும், காலி மாவட்டத்தில் 572 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 691 பேருக்கும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 96 பேருக்கும், திருகோணமலை மாவட்டத்தில் 105 பேருக்கும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 161 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். மருதனார்மடம் கொத்தணி தொற்றாளர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு இன்றைய தினத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்றையதினம் 120 பேருக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இணுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மருதனார்மடம் கொரோனா கொத்தனியின் எண்ணிக்கை 95 ஆக உயர்வடைந்துள்ளது.

மூதூர் பொலிஸ் நிலையத்திற்கு பூட்டு

திருகோணமலை மாவட்டத்தில் நேற்றைய தினத்தில் 42 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 12 பேர் மூதூர் பொலிஸ் நிலையத்தை சேர்ந்தவர்களாகும். இதனால் அந்தப் பொலிஸ் நிலையத்தை மூடி அங்கு பணியாற்றிய 38 பொலிஸாரை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

அந்த பொலிஸ் நிலையம் மூடப்பட்டாலும் வேறு பொலிஸ் நிலையங்களில் உள்ளவர்கள் அழைக்கப்பட்டு குறித்த பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள கட்டடமொன்றில் தற்காலிக பொலிஸ் நிலையமொன்று அமைக்கப்பட்டு அதன் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக திருகோணமலை பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வர வேண்டாமென கோரிக்கை

நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள சிவனொளிபாத மலையின் யாத்திரை காலம் அடுத்த வாரம் முதல் ஆரம்பமாகவுள்ளது.

தற்போது அந்த மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதால், யாத்திரிகர்கள் இந்தக் காலப்பகுதியில் அங்கு வருவதனை தவிர்த்துகொள்ளுமாறு மாவட்ட செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.