July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஐநாவின் புதிய பிரேரணை தமிழ் மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதாக அமைய வேண்டும்’

இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பிரேரணை, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலும், இலங்கை அரசு பொறுப்புக் கூறலிருந்து விடுபட முடியாத வகையிலும் அமைய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவரை இன்று நேரில் சந்தித்து, கலந்துரையாடியபோதே, பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இதனைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை மீது புதிய பிரேரணையைக் கொண்டுவருவதில் பிரிட்டன் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளதாகத் தெரியவருகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணையொன்று கொண்டுவரப்படும் என்று இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன் தன்னிடம் தெரிவித்ததாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, இலங்கைக்கு எதிரான பிரேரணையின் உள்ளடக்கம் மற்றும் ஆதரவுத் தளம் தொடர்பில் ஜனவரி மாதம் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், ஐ.நாவின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோருக்கிடையே சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.