
இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை எரிப்பதா அல்லது அடக்கம் செய்வதா என்பது தொடர்பில் அனைத்து மதக் குழுக்களுடனும் கலந்துரையாடியே, அரசாங்கம் இறுதித் தீர்மானத்துக்கு வர வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழப்பவர்களின் இறுதிக் கிரியைகளை மேற்கொள்வது தொடர்பில் சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், ஐக்கிய தேசிய கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணிப்பவர்களின் இறுதிக் கிரியைகளை ஒவ்வொருவரது மத உரிமைகளின் அடிப்படையில் மேற்கொள்வதற்கான சுதந்திரம் இருப்பதாகவும் ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
கத்தோலிக்க, முஸ்லிம் மக்கள் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதைப் போன்ற சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையேயும் அடக்கம் செய்வதை விரும்புபவர்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமைகளில் மக்களை இன, மத, குல பேதங்களால் பிரிப்பதைவிட, அனைத்து மதத் தலைவர்களுடனும் கலந்துரையாடி, தீர்வுக்கு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுடன் கொரியா, இந்தியா, ஜேர்மன் போன்ற நாடுகள் பின்பற்றும் நடைமுறைகள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.