January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 ஆயிரத்து 716 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்து 640 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தெரிவித்துள்ளார்.

கடந்த இரு தினங்களாக பெய்த அடைமழை காரணமாக மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 22,496 பேரும், கோறளைப்பற்று வாகரை பிரிவில் 5,689 பேரும், மண்முனை வடக்கு பிரிவில் 5,037 பேரும், கோரளைப்பற்று வாழைச்சேனை யில் 1,285 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கோரளைப்பற்று மத்திய பிரதேச செயலாளர் பிரிவில் 464 பேரும், மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரிவில் 359 பேரும், கோறளைப்பற்று மேற்கு பிரிவில் 128 பேரும், பட்டிப்பளை பிரிவில் 97 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஏறாவூர் பற்று செங்கலடி, மண்முனை மேற்கு வவுனதீவு, போரதீவுப்பற்று வெள்ளாவெளி, களுவாஞ்சிக்குடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள மக்களுக்கு சிறியளவிலான பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், இத்தொடர் மழையினால் 10 வீடுகள் பகுதியளவில் சேதத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தல் மற்றும் சுகாதார விதிகளுக்கமைவாக உறவினர், நண்பர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தெரிவித்துள்ளார்.