
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி செயற்பாடுகளால் தாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றதாக மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க சமாச செயலாளர் என்.எம். ஆலம் தெரிவித்துள்ளார்.
இரு நாட்டு மீனவர் பிரச்சனைகளைக் கலந்துரையாட 2016 ஆம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்தாலும், தீர்வு காணப்படாத நிலையே தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று மன்னாரில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
10 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக நீடிக்கும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி வட மாகாண மீனவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் வளங்களும் கரையோரங்களும் இன்று பல்தேசிய கம்பனிகளால் சூறையாடப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் உட்பட மன்னார் மாவட்ட அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி, மீனவ சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத்தர முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.