இன்னும் இரண்டு வருடங்களில் இலங்கையை மிதிவெடிகள் அற்ற நாடாக மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்கும் என்று இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனைகளுக்கமைய வடக்கில் மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி, முகமாலை பகுதியில் மிதிவெடிகளை அகற்றும் பணிகளை பார்வையிட்ட போதே இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த இதனை கூறியுள்ளார்.
யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள போதும் இன்னும் முழுமையாக மிதிவெடிகள் அகற்றப்படவில்லையென்று சுட்டிக்காட்டிய அவர், இன்னும் இரண்டு வருடங்களில் அவை முழுமையாக அகற்றப்பட்டுவிடும் என்று தெரிவித்துள்ளார்.
இதன்படி மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.