January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பல்கலைக்கழக வெட்டுப் புள்ளிகளில் சிக்கல்’: மாணவர்களின் அடிப்படை உரிமை மீறல் மனு நிராகரிப்பு

2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் வெட்டுப்புள்ளிகளில் ஏற்பட்ட சிக்கலில் அநீதியிழைக்கப்பட்ட 42 மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் பொறியியல் மற்றும் பௌதீகவியல் பீடங்களுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவதைத் தடுக்கக் கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட 42 மாணவர்களால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை விசாரணைக்கு உட்படுத்தாமல், நிராகரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிகார, எஸ். துரைராஜா மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் முன்னிலையில் குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா என்பது பற்றி ஆராயப்பட்டுள்ளது.

கடந்த வருடம் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் வெட்டுப்புள்ளிகளில் சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அதிகமான மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக வாய்ப்பை இழந்துள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாணவர்களின் இந்தப் பிரச்சினையைக் காரணம் காட்டி, ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இப்போது பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதில் பின்னிற்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அநீதியிழைக்கப்பட்ட மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.