திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 42 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அந்தவகையில், திருகோணமலை மற்றும் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் 33 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ. பிரேமானந் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனைகள் மூலம் இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்றைய தினத்தில் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட 58 மற்றும் 53 வயதுடைய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மூதூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 49 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 12 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கடந்த 19 ஆம் திகதி திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட ஜமாலியா பகுதியில் இறைச்சிக்கடை உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்தையடுத்து, அந்த பகுதியில் உள்ள 150 இற்கும் மேற்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனைகளில் நான்கு மாணவர்கள் உட்பட 12 குடும்ப உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்தோடு, திருகோணமலை தீயணைப்பு படை வீரர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், குறித்த தீயணைப்பு படை வீரர் ஒருவரின் தாய் மற்றும் தந்தைக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை- ஜமாலியா மற்றும் மூதூர் பகுதிகளில் தொடர்ந்தும் அன்டிஜென் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் 105 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், இந்த பண்டிகைக் காலத்தில் திருகோணமலைக்கு சுற்றுலாக்களை மேற்கொள்வதை குறைத்துக்கொள்ளுமாறு திருகோணமலை மாவட்ட கொவிட்- 19 தடுப்புக் குழு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.