வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்போது சில பிரதேசங்களில் அடை மழை பெய்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் வளிமண்டளவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை கடந்த சில தினங்களாக இந்த மாகாணங்களில் தொடர்ச்சியாக பெய்த மழையால் தாழ்நில பிரதேசங்களில் தற்போது வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேலும் வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, பொலன்னறுவை, மாத்தளைமாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்த திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை தொடரும் மழையுடனான காலநிலையால் கலாவாவி, விக்டோரியா, கொத்மலை, ரந்தெனிகல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அத்துடன் இராஜாங்கனை, தெதுருஓயா மற்றும் களுகல்ஓயா நீர்த்தேக்கங்களில் சில வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தொடரும் மழையுடனான வானிலையால் வடக்கு, கிழக்கு மத்திய, வட மேல், ஊவா, வட மத்திய மாகாணங்களில் 2,623 குடும்பங்களை சேர்ந்த 8,021 பேர் பாதிக்கப்பட்டுளளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.