
மட்டக்களப்பு, கண்ணகி அம்மன் கோவில் வீதிப் பகுதியில் நேற்றிரவு தாதியர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் 55 வயதுடைய தாதி ஒருவரே இவ்வாறாக காயமடைந்துள்ளார்.
அந்தப் பகுதியில் வசிக்கும் நபரொருவரால் பறவைகளை சுடும் ‘எயார்கன்’ ரக துப்பாக்கி மூலம் மரமொன்றில் தொங்கிய வௌவாலை நோக்கி நடத்திய சூடே தாதியர் மீது பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த நபர் நேற்றிரவு தனது வீட்டின் மேல்மாடியில் இருந்து மரத்தில் இருந்த வெளவால் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போது, எதிர்வீட்டில் இருந்து வெளியில் வந்த தாதி மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாகவும் இதில் காயமடைந்த தாதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் மட்டக்களப்பு பொலிஸார், அந்த துப்பாக்கி சூட்டை நடத்தியவரை கைது செய்துள்ளனர்.