வடக்கு கடல் எல்லையில் அதிகரித்துள்ள இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் சபையில் முறையிட்டார்.
அவ்வேளையில், “வடக்குக்கு அதிகாரங்களை வழங்க வேண்டும் என இந்தியாவிடம் கேட்பதை போலவே இதனையும் அவர்களிடமே சென்று தீர்வு காணுங்கள் ” என்று கடும் தொனியில் அமைச்சர் வாசுதேவ நாணயகார கூறினார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான 09 ஒழுங்குவிதிகள், மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் 10 கட்டளைகள் என்பன மீதான விவாத்தில் உரையாற்றிய சார்ல்ஸ் எம்.பி வடக்கின் மீனவர் பிரச்சினை குறித்து பேசினார். அவர் கூறுகையில், “உற்பத்தி வரிகள் குறித்து சட்டங்களை இயற்றும் நோக்கில் அரசாங்கம் செயற்படுகின்ற நிலையில் வடக்கில் மீனவர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக இந்திய இழுவைப்படகுகள் தொடர்ச்சியாக எமது கடல் எல்லையில் மீன் பிடிப்பதையும் எமது மீனவர்களின் படகுகளுக்கு சேதாரம் விளைவிப்பதையும் அவதானிக்க முடிகின்றது. இந்த இழுவைப்படகுகளுக்கு எதிராக மன்னாரில் எமது மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். எனவே அரசாங்கம் இதனை கருத்தில் கொள்ள வேண்டும். வடக்கை சேர்ந்த ஒருவரே மீன்பிடி அமைச்சராக உள்ளார். எனினும் அரசாங்கம் இந்த விடயங்களை கவனிக்காத நிலைமையே உள்ளது. இந்திய மீனவ படகுகள் நாளாந்தம் இலங்கை கடல் எல்லைக்குள் வருகின்றன. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அமைச்சர்
பதில்****************
இதன்போது சபையில் இருந்த அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால் வளர்ப்பு, கடற்றொழில், துறைமுகங்கள் அபிவிருத்தி மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர,சில நாட்களுக்கு முன்னர் வடக்கில் இருந்த கடற்படைகள் நியூ டயமன் கப்பல் மீட்பு பணிகளுக்கு ஈடுபட்ட காரணத்தினால் சில நெருக்கடிகள் இருந்தன. எனினும் பாதுகாப்பு கூட்டத்தில் இந்த விடயங்களை மீண்டும் நாம் வலியுறுத்துகின்றோம். அதுமட்டுமல்ல கொவிட் -19 நெருக்கடிகள் உள்ள நிலையில் இந்திய மீனவர்களை கைது செய்தால் எங்கு தடுத்து வைப்பது என்ற கேள்வி உள்ளது.
எனவே இவற்றை கண்காணிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. எதிர்வரும் காலங்களில் வடக்கு கடல் பகுதி அதிக பாதுகாப்பிற்கு உற்படுத்தப்படும்” என்றார்.கேள்வி:- இந்திய அரசாங்கதிற்கு பயந்து நீங்கள் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தாது உள்ளீர்களா?அமைச்சர்: இந்திய அரசாங்கத்திற்கு நாம் அஞ்சவில்லை, இந்த அரசாங்கம் யாருக்கும் அஞ்சாது. எனினும் அவ்வாறு பயந்த காலங்களும் இருந்தன. எவ்வாறு இருப்பினும் அண்மைக் காலங்களில் இவ்வாறான அத்துமீறல்கள் இடம்பெற்றுள்ளன.
எனவே கடற்படைக்கு இது குறித்து அறிவுறுத்தியுள்ளோம். அதேபோல் எதிர்வரும் காலங்களில் அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.இதன்போது அமைச்சர் வாசுதேவ நாணயகார,“நீங்கள்தானே இந்தியாவிடம் எல்லாம் கேட்கிறீர்கள், இதையும் சொல்லுங்கள்” என்றார். சார்ல்ஸ் எம்.பி : “நீங்கள் எமது மக்களுக்கு தரவேண்டியதை தராது போனால் நாம் அவர்களிடம் தானே கேட்டாக வேண்டும்”. அமைச்சர் வாசு : “எங்களுக்கு அதிகாரங்களை தாருங்கள் என இந்தியாவிடம் கேட்கின்றீர்கள், மறுபக்கம் எம்மிடம் வந்து இந்தியாவை கட்டுப்படுத்துங்கள் என கூறுகின்றீர்கள்”.