
நத்தார் மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேவாலயங்களில் ஆராதனைகளில் கலந்துகொள்ளக் கூடியோரின் எண்ணிக்கையை 50 ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 25 பேருக்கே ஒரே நேரத்தில் ஆராதனையில் கலந்துகொள்ள முடியுமென்று அறிவிக்கப்பட்டிருந்த போதும், மதத் தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அந்த எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அரசாங்க அதிபர் இதனை கூறினார்.
சுகாதாரப்பிரிவினர், பொலிஸார் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் தேவாலயங்களின் விசேட ஆராதனைகளுக்காக 50 பேரை அனுமதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி விசேட ஆராதனைகளில் கலந்து கொள்பவர்கள் கட்டாயமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்வதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் குறிப்பிட்டுள்ளார்.