இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் செயன்முறையை முன்னெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று கூடிய கொவிட் தடுப்புக்கான செயலணியின் சந்திப்பின் போதே லலித் வீரதூங்கவுக்கு அந்த அதிகாரத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது கொவிட் தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டுவருவதை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொவிட் தடுப்புக்கான செயலணியிடம் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
அதற்கமைய தடுப்பூசி தொடர்பாக விரிவாக ஆராய்ந்ததன் பின்னர், சம்பந்தப்பட்ட நாடுகள் மற்றும் இலங்கையின் சுகாதார பிரிவினருடன் கலந்துரையாடி அவற்றை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய அது தொடர்பான செயன்முறைகளை முன்னெடுக்கும் பொறுப்புகளை ஜனாதிபதியின் ஆலோசகரிடம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டள்ளது.
இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதான, விமான நிலைய மற்றும் விமான சேவைகள் அதிகாரிகள் மற்றும் கொவிட் தடுப்புக் குழு உறுப்பினர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.