
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கொழும்பிலுள்ள ஐ.நா. உயர்ஸ்தானிகராலயத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ‘தமிழ் அவனி’யிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
“மகசின் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் பலர் கொரோனாவுக்கு இலக்காகியுள்ளனர் என்ற தகவலை அவர்களின் குடும்பத்தினர் மிகவும் கவலையுடன் எனது கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தனர். அதையடுத்து பாதிக்கப்பட்ட கைதிகளின் நிலைமை தொடர்பில் ஐ.நாவின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன்.
தமிழ் அரசியல் கைதிகள் போதிய மருத்துவ மற்றும் சுகாதார வசதிகளுடன் இல்லை என்றும், இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் கொழும்பிலுள்ள ஐ.நா. உயர்ஸ்தானிகராலயத்தைக் கேட்டுள்ளேன்.
கொரோனாத் தொற்று ஆபத்தையடுத்து சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு அண்மையில் அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஆனால், அது தொடர்பில் அரசு அசமந்தப்போக்கில் இருந்த காரணத்தால் இன்று தமிழ் அரசியல் கைதிகள் கொரோனாவின் பிடிக்குள் சிக்கியுள்ளனர் என்று தெரிவித்தார்.
வீடு திரும்பத் தயாரான
கண்ணதாஸுக்கும் கொரோனா
இந்நிலையில்,கொழும்பு மகசின் சிறைச்சாலையிலிருந்து வீடு திரும்பத் தயாராகியிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தமிழ் அரசியல் கைதியான யாழ். பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர் நல்லை க.கண்ணதாஸ் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தத் தகவலை அவருடைய வழக்கு விசாரணையை முன்னெடுக்கும் ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ‘தமிழ் அவனி’யிடம் தெரிவித்தார்.
“கண்ணதாஸை வீடு அனுப்புவதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றிருந்த நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவர் கந்தக்காடு கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
கொரோனா சிகிச்சை நடைமுறைகளுக்கு அமைய அவருக்கான தனிமைப்படுத்தல் காலம் நிறைவு பெற்றதும் அவர் வீடு திரும்புவார் என்று எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.