வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், வெளிவிவகார அமைச்சு அல்லது சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை ஆகியவற்றின் ஊடாகவே நாடு திரும்புவதற்குரிய அனுமதியைப் பெற வேண்டுமென்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
உலக நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்தே, அரசாங்கம் இதனை அறிவித்துள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தமது சுய விருப்பத்தின் பேரில் நாடு திரும்பலாம்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், அரச அனுசரணையின்றி வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் பணம் செலுத்தி ஹோட்டல்களில் தனிமைப்படுத்தல் காலத்தை பூரணப்படுத்துவதற்கான நிபந்தனையுடன் நாட்டுக்கு அனுமதிக்கப்படவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது.
எனினும், கொரோனா பரவலின் தீவிரத்தைத் தொடர்ந்து நிபந்தனையுடனான நாடு திரும்பும் நடைமுறையை மீண்டும் பின்பற்ற வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.