கர்ப்பிணி பெண்களுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டு, ‘பேபி பாம்’ முறையில் அவர்களின் குழந்தைகளை விற்பனை செய்யும் மோசடி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஒருவரை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
47 வயதுடைய குறித்த சந்தேக நபர், இதுவரையில் 30 குழந்தைகளை இவ்வாறாக விற்பனை செய்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் கர்ப்பமடைந்து இன்னல்களுக்கு முகம்கொடுக்கும் பெண்களையே இவர் இந்த வியாபார செயற்பாடுகளுக்கு பயன்படுத்தியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தளங்களின் ஊடாக விளம்பரம் செய்து அந்தப் பெண்களை தன்னிடம் அழைத்து அவர்களை தமது பராமரிப்பில் வைத்துக்கொண்டு, குழந்தை பிறந்ததும் அதனை பெருந்தொகை பணத்திற்கு அவர் விற்று வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்காக கொழும்பு மொரட்டுவை பிரதேசத்தில் இரண்டு இடங்களை கர்ப்பிணி பெண்களை தங்க வைத்திருப்பதற்காக பயன்படுத்தியுள்ளதாகவும், இவ்வாறாக தங்க வைக்கப்பட்டிருந்த 12 கர்ப்பிணி பெண்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு மாத்தளை- உக்குவெல பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ள பொலிஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.