January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கையில் உயர்வு : இலங்கையின் இன்றைய நிலவரம்

File Photo: Twitter/ Srilanka red cross

இலங்கையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 427 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 35 பேர் சிறைச்சாலை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்று கொவிட் தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 38,058 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 618 பேர் குணமடைந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29,300 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 364 பேரே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளாந்தம் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 500 க்கும் அதிகமாகவே இருந்த நிலையில் நேற்றைய தினத்திலும் இன்றும் அந்த எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது.

அதிவேக வீதியிலும் கொரோனா பரிசோதனை

அதிவேக வீதியில்  மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் பகுதியில் கொரோனா பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மாகாண அதிகாரிகளினால் தேர்ந்தெடுக்கப்பட்ட வெளியேறும் பகுதிகளில் எழுந்தமானமாக பரிசோதனைகள் இடம்பெறுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பண்டிகை காலத்தில் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது அவசியமெனவும் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.

குடும்பத்தில் ஒருவர் மாத்திரம் அத்தியாவசிய பொருட்கொள்வனவில் ஈடுபட வேண்டுமெனவும் சன நெரிசல் மிகுந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நத்தார் பண்டிகை நாளிலும் அதற்கு முன்னரான நாளிலும் மத வழிபாடுகளின் போது, சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டுமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரும் நடவடிக்கை இடைநிறுத்தம்

பிரித்தானியாவில் இருந்து இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கையை இடைநிறுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

பிரிட்டனில் புதிய கொரோனா தொற்று பரவும் நிலையில் அங்கிருந்து அழைத்துவரும் நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வரும் நிலையில் பிரிட்டனில் அழைத்து வருவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை 23ஆம் திகதி முதல் பிரித்தானியாவில் இருந்து நாட்டிற்கு வருகை தரும் விமானங்கள் இரத்து செய்யப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.