January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்- 19 தடுப்பூசி கொள்வனவில் இலங்கைக்கு ஒத்துழைக்க ஐநா தயார்

உலக நாடுகள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ள நிலையில், தடுப்பூசி கொள்வனவு, விநியோகம் மற்றும் நிர்வாக விடயங்களில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய நாடுகள் சபை முன்வந்துள்ளது.

இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் ஆகியோருக்கிடையே இன்று நடைபெற்ற சந்திப்பில், இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமருடனான சந்திப்பில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி டாக்டர் ரய்ஸா பான்ட்சே, யுனிசெப் பிரதிநிதி டிம் சுட்டன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த சவால்மிக்க தருணத்தில் தாம் இலங்கைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா இரண்டாவது அலை பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், தடுப்பு மருந்து மாத்திரமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை முதற்கட்டமாக தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்யும் போது, யுனிசெப் நிறுவனமும் உதவத் தயாராக இருப்பதாக யுனிசெப் பிரதிநிதி டிம் சுட்டன் தெரிவித்துள்ளார்.

உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தினாலும், நோய் பரவும் வீதத்தை குறைப்பதில் வெற்றிகண்டுள்ளதா என்ற கேள்வி நிலவுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி டாக்டர் ரய்ஸா பான்ட்சே தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், தடுப்பூசி கொள்வனவு, விநியோகம் மற்றும் நிர்வாக விடயங்களில் இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைப்பு வழங்க உறுதியளித்துள்ளது.

This slideshow requires JavaScript.