November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுகாதார வழிகாட்டல்களைப் பேணி நத்தார் விழாவைக் கொண்டாட அழைப்பு

இலங்கையில் இம்முறை ஆடம்பர களியாட்டங்களைத் தவிர்த்து, சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி நத்தார் விழாவினைக் கொண்டாட மக்கள் முன்வர வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலையில் இவ்வருட நத்தார் கொண்டாட்டங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இப்படியான கொவிட்- 19 சூழ்நிலையில் எவ்வாறு கிறிஸ்து பிறப்பைக் கொண்டாட வேண்டுமென இறைவன் அறிவுறுத்தியுள்ளதாகவும், ஆண்டவருடைய பிரசன்னம், வல்லமையை எல்லா மக்களும் அறிந்துகொள்ளும் விதமாக நத்தார் விழா கொண்டாடப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை ஆடம்பரங்களைத் தவிர்த்து, பல்வேறு தேவைகளோடு வாழ்கின்ற மக்களுக்கு பயனுள்ள விதத்தில் பகிர்ந்தளிக்க இந்த கிறிஸ்துமஸ் விழா சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்வேறு பிரச்சினைகளால் நம்பிக்கையிழந்து வாழ்கின்ற மக்களுக்கு, நம்பிக்கையினைக் கொடுக்கின்ற விழாவாகவும் இந்த கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட வேண்டும் என்றும் அருட்தந்தை ஜெபரட்ணம் அழைப்பு விடுத்துள்ளார்.

குறிப்பாக, இம்முறை சுகாதார வழிகாட்டல்களைப் பேணி நம்பிக்கையான மனதோடு கொண்டாடப்படும் விழாவே ஆண்டவருக்கு உகந்ததாக அமையும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.