இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களுக்கான இறுதிக் கிரியைகள் குறித்த சுகாதார தரப்பினரின் தீர்மானம் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என்று அமைச்சரவை ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதில் மேலெழுந்துள்ள பிரச்சினை குறித்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது, இணை அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன இதனைத் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்கள் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினையை மனிதாபிமான கண்ணோட்டத்தில் பார்த்து, விரைவில் தீர்வொன்றை வெளியிடுமாறு அரசாங்கம் சுகாதார தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொவிட்- 19 மரணங்களைக் கையாளும் விடயங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டல்களுக்கு அமையவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் இணை அமைச்சரவைப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக மாலைதீவுக்கு அனுப்புவது குறித்து அமைச்சரவையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.