இலங்கை மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 334 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர் இமேஷ் பிரதாபசிங்க தெரிவித்தார்.
மாவட்டத்தில் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் 7,715 பேருக்கு பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையிலேயே இந்த கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் மாவட்ட சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பிரதேச சபையின் தவிசாளர் பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர் முடிவுகள் வர முன்னர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் பீசீஆர் முடிவுகளில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவரிடம் இரண்டாவது தடவையாகவும் பீசீஆர் மாதிரிகள் பெறப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருதாக மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர் இமேஷ் பிரதாபசிங்க கூறியுள்ளார்.
இரண்டாவது பரிசோதனையிலும் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படுமாக இருந்தால் அவர் கலந்துகொண்ட நிகழ்வில் பங்குபற்றியவர்களை தனிமைப்படுத்துவது குறித்து தீர்மானிக்கபடும் எனவும் வைத்தியர் இமேஷ் பிரதாபசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், இது போன்ற அரசாங்க நிகழ்வுகளை ஏற்பாடு செய்வர்கள் கடுமையான சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறும் வெளிமாவட்டங்களிலிருந்து பாதுகாப்பின்றி நுவரெலியா மாவட்டத்திற்குள் சுற்றுலா வருவதனை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் லிந்துலை சுகாதார வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உட்பட 15 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.