January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”கொரோனா தொற்றாளர்கள் இல்லாத பகுதியாக மேல் மாகாணத்தை மாற்றியமைக்க வேண்டும்”

இலங்கையின் பொருளாதார கேந்திர மையமாக விளங்கும் மேல் மாகாணத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் ஒரு தொற்றாளரேனும் அடையாளம் காணப்படாத மாகாணமாக மாற்றியமைக்க வேண்டும் என்று பொருளதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பஸில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற  ‘வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு’ எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மேல் மாகாணத்திற்கான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான  கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தேசிய பொருளாதாரத்தின் கேந்நிர மையமாக மேல் மாகாணம் இருப்பதால் இந்த மாகாணத்தினை அபிவிருத்தி செய்வது நாட்டின் எதிர்கால முன்னேற்றப் பாதைக்கு நேரடிப் பங்களிப்பினை வழங்கும் என்று குறிப்பிட்டுள்ள பஸில் ராஜபக்‌ஷ, இங்கு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க  மக்கள் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பேலியகொடை மீன்சந்தை மற்றும் மெனிங் பொதுச்சந்தை மூடப்பட்டமையானது முழு நாட்டிற்கும் பாரியதொரு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால் இங்கு கொரோனாவை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி ஜனவரி மாதம் தொடக்கம் ஒரு கொவிட் தொற்றாளரேனும் அடையாளம் காணப்படாத பகுதியாக  மேல் மாகாணத்தினை மாற்றியமைக்க வேண்டும் எனவும், அப்படியிருந்தால் நாட்டுக்கு வெற்றிகரமான பாதையில் செல்ல முடியுமாக இருக்கும் என்றும் பஸில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், மேல் மாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மேல்மாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.