January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழர் விவகாரம் ஜெனிவா செல்ல ராஜபக்‌ஷ அரசே காரணம்’

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எதிரொலிக்க ராஜபக்‌ஷ அரசாங்கமே  முழுப் பொறுப்பாகும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா அமர்வில் இலங்கை முஸ்லிம் மக்களின் விவகாரமும் அங்கு எதிரொலிக்கும் நிலைமையையும் இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும் இது இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தை மென்மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றும் சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜெனிவா அமர்வில் இலங்கை எதிர்நோக்கவுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் 2009ஆம் ஆண்டு போரை நிறைவுக்கு கொண்டுவந்த அரசு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில் பல வாக்குறுதிகளை ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு வழங்கியிருந்தது.

ஆனால், அந்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றாத காரணத்தாலேயே, இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அதன் உறுப்பு நாடுகள் தீர்மானங்களை அடுத்தடுத்து நிறைவேற்றின. எனினும், அந்தத் தீர்மானங்கள் கிடப்பில் போடப்பட்டன.

தற்போதைய கோட்டாபய தலைமையிலான அரசும், அந்தத் தீர்மானங்கள் தொடர்பில் முன்மாதிரியான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. போதாக்குறைக்கு கடந்த நல்லாட்சி அரசில் மீளவும் நிறைவேற்றப்பட்ட ஐ.நா. தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து இந்த அரசு விலகி நாட்டுக்கான சர்வதேச நெருக்கடிகளை அதிகரிக்கச் செய்துள்ளது.

இலங்கையில் கொரோனா  தாக்கத்தால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களையும், அவர்களின் விருப்பத்துக்கு மாறாக அரசு எரித்து வருகின்றது. இது முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கையை உதாசீனம் செய்யும் அடிப்படை உரிமை மீறலாகும். இந்த விவகாரமும் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வில் எதிரொலிக்கும் எனத் தெரியவந்துள்ளது.

தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகள் மீது கைவைத்து அவர்களைச் சீண்டுவதால் எந்தவிதமான நன்மைகளையும்  அரசு பெறப்போவதில்லை. மாறாக நாட்டுக்கு சர்வதேச அரங்கில் அவப்பெயரைத்தான் இந்த அரசு சம்பாதிக்கின்றது.

இது இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தை மென்மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.