சமூக ஊடகங்களின் பயன்பாட்டை அடக்க ராஜபக்ச அரசு முயற்சிக்கின்றது. இது இந்த அரசின் ஜனநாயக விரோத செயலாகும். இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரைப் பதிவு செய்வதற்கான ராஜபக்ச அரசின் செயற்பாடு எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஜனநாயக விரோத செயலாகும்.
இதுபோன்ற முடிவுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து நிற்கும். சமூக ஊடகங்களுக்கான சுதந்திரம் மிகவும் அவசியம். அந்தச் சுதந்திரத்தை இந்த அரசு தட்டிப் பறிக்க முடியாது.
பல சந்தர்ப்பங்களில் சமூக ஊடகங்கள் மூலம் நான் தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டேன். அதற்கு எதிராக நான் பொங்கியெழவில்லை. அந்த ஊடகங்களின் கருத்துச் சுதந்திரத்தை மதித்தேன். எனவே, கருத்துரிமை தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு எதிராக முட்டுக்கட்டைகளைப் போட முடியாது என்று தெரிவித்துள்ளார்.