January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திருகோணமலை மக்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் விடுக்கும் கோரிக்கை

கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில் அநாவசியமான நடமாட்டங்களை தவிர்ப்பதுடன், சுகாதார ஆலோசனைகளையும் முறையாக கடைப்பிடிக்குமாறு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

திருகோணமலையில் ஜமாலியா மற்றும் துளசிபுரம் ஆகிய பிரதேசங்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே  மாவட்ட  அரசாங்க அதிபர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த பிரதேசங்களுக்கு இன்று சென்ற  அரசாங்க அதிபர் அங்கு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்தார்.

இதன்போது இந்தப் பிரதேசங்களில் மக்கள் தமது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய,சில வர்த்தக நிலையங்களை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி திறக்க நடவடிக்கையெடுக்குமாறு அரசாங்க அதிபரிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

இதனையடுத்து உரிய நடைமுறையை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளருக்கு அரசாங்க அதிபர் அறிவுறுத்தல் விடுத்தார்.

மேலும் குறித்த பிரதேசத்தை முடக்கி மக்களை அசௌகரியத்திற்கு உட்படுத்த வேண்டுமென்று எதிர்பார்க்கவில்லையெனவும், இதனால் மக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வீடுகளில் இருந்து வெளியேறுவதை தவிர்க்குமாறும் மக்களை கேட்டுக்கொள்வதாக  அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.