
இலங்கையின் கிழக்கு கடலில் எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்ட தீ முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ குழுக்களின் கூட்டு முயற்சியில் இன்று (09) அதிகாலையில் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது தீப் பிழம்போ , புகையோ தென்படவில்லையெனவும் இன்று காலை கடற்படை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை டக் படகைப் பயன்படுத்தி அந்த கப்பல் மீண்டும் ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், இதன்படி கப்பல் சங்கமங்கண்டியில் சுமார் 37 கடல் மைல் தொலைவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கப்பலில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்று வட்டத்தில் டீசல் எண்ணெய் போன்ற படிவம் காணப்பட்டதுடன் இந்திய கடலோர காவல்படையின் டோர்னியர் விமானமொன்று அந்தப் பகுதிக்கு சென்று அப்பகுதியில் அந்த படிவம் தென்படும் பகுதியில் இரசாயனமொன்றை தெளித்துள்ளது.
தெளிக்கப்பட்ட இந்த இரசாயனம் கடல் நீரில் கலந்த டீசலின் ரசாயன கலவையை மாற்றி இதனால் கடல் சூழலில் ஏற்படக்கூடிய தாக்கத்தை குறைக்கும். என்று கூறப்பட்டுள்ளது.மேலும், தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமைக்கு (NARA) சொந்தமான கடல் ஆராய்ச்சி கப்பலொன்று இப்பகுதிக்கு வந்து மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
