January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மலையகத்தில் மீண்டும் கொரோனா அச்சம்: இலங்கையின் இன்றைய நிலவரம்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 364 பேர் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 37,623 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த 415 பேர்  குணமடைந்து இன்றைய தினத்தில் சிகிச்சை நிலையங்களில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்படி நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  28,682 ஆக உயர்வடைந்துள்ளதாக கொவிட் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

நுவரெலியா லிந்துலையில் 15 பேருக்கு தொற்று 

லிந்துலை பகுதியில் உறவினர்கள்  11 பேர் உள்ளிட்ட 15 பேருக்கு இன்றைய தினத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

டயகம மேற்கு தோட்டத்தில் 11 பேருக்கும், அக்கரப்பத்தனை நியூபோர்ட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த 3 பேருக்கும், லிந்துலை வோல்ட்ரீம் தோட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது.

டயகம மேற்கு 4 ஆம் பிரிவு தோட்டத்திற்கு கடந்த 11 ஆம் திகதி கொழும்பிலிருந்து வருகை தந்த பூசகர் ஒருவருக்கு முதலில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இவர் தனது  உறவினர் வீட்டில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டது மட்டுமன்றி அப்பகுதியில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளிலும் பங்கேற்றுள்ளமை விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள 10 குடும்பங்களை சேர்ந்த 50 ற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், குறித்த பூசகரின் உறவினர் வீட்டில் இருந்த 12 பேருக்கு பீசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அத்துடன் மற்றைய நான்கு பேரும் கொழும்பில் இருந்து வந்திருந்த நிலையில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும், குடும்ப உறுப்பினர்களும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் கொரோனா தொற்று சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளருக்கு மீண்டும் பீசீஆர்

நுவரெலியா மாவட்டத்தின் அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளரிடம் பீசீஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் இன்று மீண்டும் பெறப்பட்டுள்ளன.

அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளரிடம் கடந்த 16 ஆம் திகதி பீசீஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெற்றப்பட்ட நிலையில், அவருக்கு வைரஸ் தொற்று நேற்று உறுதியானது.

இந்த நிலையில், வைரஸ் தொற்று என உறுதிப்படுத்தப்பட்ட தவிசாளர் பல நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார்.

அத்துடன், பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்த நிலையில்  முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரே அவர் பல இடங்களுக்கு சென்றுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையிலேயே அவர் மீண்டும் பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.