ஐக்கிய நாடுகளின் சபையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய தீர்மானமொன்றைச் சமர்ப்பிக்க அமெரிக்கா தயாராகி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கைக்கு எதிரான புதிய தீர்மானத்தைச் சமர்ப்பிப்பதற்கான முன்னெடுப்புகளை அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராஜ்ஜியம் ஆகியன மேற்கொண்டு வருகின்றதாகவும் கொழும்பு தேசிய பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 30/1 தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகிக்கொள்வதாக அறிவித்ததைத் தொடர்ந்தே, இந்த புதிய தீர்மானம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான புதிய தீர்மானத்தைச் சமர்ப்பிப்பதன் ஒரு கட்டமாக, ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் மற்றும் சமாதான முயற்சிகளுக்கான துணைச் செயலாளர் ரோஸ்மேரி ஏ. டிகார்லோ 2021 ஆரம்ப பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 30 வருட யுத்தத்துக்குப் பின்னரான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் ஆகியவற்றைக் கையாளும் தீர்மானத்தில் இருந்து புதிய அரசாங்கம் விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.