October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் பணம் செலுத்தி தனிமைப்படுத்தலுக்கு உட்படும் நடைமுறை

அரச அனுசரணையின்றி வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் பணம் செலுத்தி ஹோட்டல்களில் தனிமைப்படுத்தல் காலத்தை பூரணப்படுத்துவதற்கான நிபந்தனையுடன் நாட்டுக்கு அனுமதிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் இந்த புதிய நடைமுறை அமுலுக்கு வருவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் அரசாங்கம் தனிமைப்படுத்தல் நடைமுறைகளை இலவசமாக வழங்கி வந்தது.

இதற்கமைய இலங்கையின் தூதரகங்களின் ஊடாக வரும் புலம்பெயர் பணியாளர்கள், மாணவர்கள், நோயாளர்கள், தற்காலிக வீசாவை கொண்டவர்கள், அரசாங்க மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அரசாங்கத்தின் இலவச தனிமைப்படுத்தல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க விமான சேவை நிறுவனங்கள் ஏற்பாடுகளை செய்துகொடுக்கும்.

மேற்குறிப்பிடப்பட்டவர்கள் தவிர்ந்த, இலங்கையர்கள் அல்லது இரட்டைக் குடியுரிமையை கொண்டவர்கள் ஹோட்டலில் பணம் செலுத்தி தனிமைப்படுத்தலை கடைப்பிடிக்கும் நிபந்தனைகளுடன் நாட்டுக்கு வருவதற்கே அனுமதியளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நடைமுறைகளின் கீழ் இலங்கைக்கு வருகை தர அனுமதியளிக்கப்படும் நபர்கள், பணம் செலுத்தி, தனிமைப்படுத்தப்படுவதற்கான பொறுப்பு அந்தந்த விமான சேவை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.