தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அதிகாரப் பகிர்வையும் கொடுத்துவிடக் கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே அமைச்சர் சரத் வீரசேகர இருப்பதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாகாண சபை முறைமை தேவையற்றது என சரத் வீரசேகர போன்றோர் குறிப்பிடும் போது, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வேறு சிலர், மார்ச் அல்லது ஏப்ரல் மாதமளவில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவித்து வருகின்றதாகவும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘இலங்கை சிங்கள நாடு, தமிழ் மக்களுக்கென்று எந்தவிதமான அதிகாரப் பகிர்வும் வழங்கப்படக் கூடாது’ என்ற சரத் வீரசேகரவின் கருத்து பிழையானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு- கிழக்கு மாகாணங்களில் சிங்கள மக்கள் எந்தக் காலத்திலும் பெரும்பான்மையாக இருந்ததில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதால், இலங்கை மக்களிடையே சௌஜன்யமும், நல்லுறவும் ஏற்படாது’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘அவருடைய கருத்தை வட- கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.