இலங்கையில் சமூக ஊடகங்கள் குறித்து தான் வெளியிட்ட கருத்தின் உண்மையான அர்த்தத்தைத் தவிர்த்து, மோசமான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது, இலங்கையில் சமூக ஊடக பாவனையாளர்களைப் பதிவுசெய்வதற்கான விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.
அரசாங்கம் வெளிநாட்டு டிஜிட்டல் முகவர்களைப் பதிவுசெய்வது குறித்தே கவனம் செலுத்தி வருவதாகவும், சமூக ஊடக பாவனையாளர்களைப் பதிவுசெய்யும் திட்டமொன்று இல்லை என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
எனினும், ஊடகங்கள் தான் வெளியிட்ட கருத்தை மோசமான முறையில் சித்தரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்வேறு அரசாங்கங்களும் கரிசனை கொண்டுள்ளதைப் போன்று, பல்தேசிய டிஜிட்டல் நிறுவனங்களின் தரவு ஆதிக்க நிலையைக் கட்டுப்படுத்துவதற்கே இலங்கை அரசாங்கமும் ‘வெளிநாட்டு டிஜிட்டல் முகவர்களைப் பதிவுசெய்வது’ குறித்து கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.