July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாலர், ஆரம்பப் பிரிவு பாடசாலைகளைத் திறப்பது தொடர்பான கல்வி அமைச்சரின் அறிவித்தல்

file photo: Facebook/ Unicef Sri Lanka

கொரோனா தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக மூடப்பட்டுள்ள முன்பள்ளிகளையும் மற்றும் பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவு வகுப்புகளையும் மீள ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த மற்றைய பிரதேசங்களில், ஜனவரி 11 ஆம் திகதி முதல் முன்பள்ளிகளும், தரம் 1 முதல் 5 வரையான ஆரம்பப் பிரிவு பாடசாலைகளும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று நிலைமையால் கடந்த ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் முன்பள்ளிகளும், அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டதுடன், அதன்பின்னர் நவம்பர் 23 ஆம் திகதி முதல் மேல் மாகாணம் தவிர்ந்த மற்றைய பிரதேசங்களில் தரம் 6 முதல் 13 வரையான வகுப்பு மாணவர்களுக்காக மாத்திரம் பாடசாலைகள் திறக்கப்பட்டன.

ஆனபோதும் பாடசாலைகள் திறக்கப்பட்ட சில பிரதேசங்களில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக அந்தப் பாடசாலைகள் மீண்டும் மூடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்ட கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் மற்றும் மீண்டும் திறக்கப்பட்டு மூடப்பட்ட பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பாக சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் இது தொடர்பாக பின்னர் அறிவிக்க நடவடிக்கையெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை இப்போதைக்கு திறக்க முடியாத நிலைமையே காணப்படுவதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.