July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாஸா எரிப்புக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எதிர்ப்பு

“கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதில்லை என்ற முடிவை அரசு உடனடியாக மாற்ற வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

சந்திரிகா தனது உத்தியோகபூர்வ முகநூலில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்பான விடயம் தொடர்பில் அனைத்து விவரங்களும் கிடைக்கும்வரை நான் அறிக்கை எதனையும் விடப்போவதில்லை. இதேவேளை, உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்யத் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் ஆதாரமற்றவை என நான் கருதுகின்றேன்.

இலங்கையிலும் வெளிநாடுகளிலுமுள்ள ஆராய்ச்சியாளர்களுடனும், விஞ்ஞானிகளுடனும் ஆராய்ந்த பின்னர் உடல்களைத் தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என அரச தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் வழக்கத்தை முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக பின்பற்றுகின்றனர். முஸ்லிம் சமூகத்தினர் தங்கள் மத நம்பிக்கையைப் பின்பற்றி ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு நியாயபூர்வமான உரிமையுள்ளது. இது எவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.