November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் செயற்பட வேண்டும்”

இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழர்களின் குரல் சர்வதேச அரங்கில் ஓங்கி ஒலிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

2021 மார்ச் மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரை சரியான முறையில் கையாள்வதற்காக சர்வதேச சமூகத்தை தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் இணைந்து செயற்பட வைப்பதற்கு கூட்டமைப்பு தீர்மானித்துள்ளமை தொடர்பாக கருத்து கூறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களால் தயாரிக்கப்பட்ட வரைவுத் திட்டம் ஒன்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனால் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் குறித்த வரைவுத்திட்டமானது அவர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே இந்த விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அணுகும் வகையில் அந்தக் கட்சிகளுடன் தொடர்ந்து பேசி இறுதி முடிவை எடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சம்பந்தன் கூறுகையில், ”இந்த விடயத்தில் நாம் நமக்குள் முரண்பட்டுக் கொண்டால் அது தெற்கு அரசியல்வாதிகளுக்கு சாதகமாகப் போய்விடும் என்பதை அனைத்துக் கட்சிகளும் உணர்ந்து, தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் செயற்பட வேண்டும் என்பதுடன், பாராளுமன்றத்திலும் சர்வதேச ரீதியிலும் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும்” என்றார்.

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் கொழும்பில் அமைந்துள்ள இல்லத்தில் நேற்று நடைபெற்ற குறித்த கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், கோவிந்தன் கருணாகரம், இரா.சாணக்கியன், த.கலையரசன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் ரெலோவின் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.