இலங்கையின் விமான நிலையங்கள் மீளத் திறக்கப்பட்ட பின்னர் ரஷ்யாவில் இருந்தே முதலாவது சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வரவுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவ்வாறாக 200 பேர் கொண்ட சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றுக்கு இலங்கை வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விமான சேவை அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மசேன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 26 ஆம் திகதி இவர்கள் கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்கள் ஊடாக வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுப் பரவல் நிலைமையை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் இலங்கையின் விமான நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டிருந்தது.
இதனால் விசேட விமான சேவைகள் தவிர்ந்த வேறு விமானங்கள் சேவைகள் எதுவும் நடைபெறவில்லை.
இந்நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து விமான நிலையங்களையும் திறப்பதற்கும், இதன்பின்னர் படிப்படியாக விமான நிலைய செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருவதற்கும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை நடவடிக்கையெடுத்துள்ளது.
இதன்போது முதற்கட்டமாக குழுக்களாக வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பாக முன்னெடுக்க வேண்டிய ஒழுங்குவிதிகள் தொடர்பில் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் சுற்றுலா பிரதிநிதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மசேன தெரிவித்துள்ளார்.