நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக எதிர்வரும் நத்தார் பண்டிகை தினத்தன்று மட்டக்களப்பு மாவட்ட தேவாலயங்களில் நடைபெறும் விசேட ஆராதனைகளில் கலந்து கொள்வதற்கு 25 பேர் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலங்களில் மக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் ஆராயும் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் அவசர கூட்டம் நேற்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் நடைபெற்ற போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், தேவாலயங்களுக்கு விசேட ஆராதனைகளுக்காக வருகை தருபவர்கள் கடுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், அவ்வாறு அவற்றை அலட்சியம் செய்பவர்களை அவதானிப்பதற்கு பொலிஸ் விசேட குழுவினருடன் பொதுச் சுகாதார பரிசோதகர்களும் தேவாலயங்களில் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நத்தார் பண்டிகையினை தொடர்ந்து புத்தாண்டு மற்றும் பொங்கல் என தொடர்ச்சியாக பண்டிகைகள் வருவதால், இந்தக் காலப் பகுதியில் மக்கள் கொரோனா தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்று அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பண்டிகைக் காலப் பகுதிகளில் வியாபார நிலையங்களில் பொருட் கொள்வனவுகளில் ஈடுபடும் மக்கள் நெரிசல் ஏற்படாத வகையில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமெனவும், இது தொடர்பில் வியாபார நிலைய உரிமையாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.