
இலங்கை- இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக எதிர்வரும் 30 ஆம் திகதி இரு நாட்டு அரசாங்கங்களுக்கிடையில் காணொளி மூலமான பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு இடையிலான விசேட சந்திப்பு, யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் மூலமான மீன்பிடி நடவக்கைகளால், வட மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும், வட மாகாண மீனவர்கள் நீண்ட காலமாக இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும், கடந்த காலங்களில் தீர்வுகள் கிடைக்காவிட்டாலும், தற்போதுள்ள அரசாங்கம் அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், இந்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்தி, இந்த பிரச்சினைக்குரிய தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு அனைத்து மீனவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்களின் அடிப்படையில், எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் தனது கருத்துக்களை முன்வைக்கவுள்ளதாகவும், பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகள் கிடைக்குமென தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.