மேல் மாகாணத்தில் இருந்து வௌிமாவட்டங்களுக்கு பயணித்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதிபொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் இருந்து இன்று வெளியேறிய 431 பேரிடம் எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறுபவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இன்று 660 பேருக்கு தொற்று – 708 பேர் குணமடைந்தனர்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 660 பேரை் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, திவுலுபிட்டிய பேலியகொட கொரோனா கொத்தணி தொற்றாளர் எண்ணிக்கை 32,380 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், இலங்கையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 36,047 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 708 பேர் குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது. இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,061 ஆக அதிகரித்துள்ளது.
வெல்லம்பிட்டி மக்கள் நிவாரணம் இன்றி திண்டாட்டம்
கொரோனா சூழ் நிலையில் கொழும்பு வெல்லம்பிட்டி பிரதேசத்தில் உள்ள ஹித்தம்பகுவ, லன்சியாவத்த, மெகட கொலன்னாவ உள்ளிட்ட பல பகுதி மக்கள், நிவாரண உதவிகள் கிடைக்கவில்லையென கவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த இரண்டுமாத காலத்திற்கும் மேலாக பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் போன்றவற்றுக்குள்ளான அந்த மக்களுக்கு கொலன்னாவ பிரதேசச் செயலகமோ அல்லது கொலன்னாவ நகர சபையோ எந்தவித உதவிகளையும் வழங்க வில்லை.
குறிப்பாக ஹித்தம்பகுவ, மெகட கொல்னானவ, சங்சியாவத்தை பகுதிகளுக்கு பள்ளிவாசல்கள்கூட உதவவில்லை என அந்த மக்கள் குறை கூறுகின்றனர்.
கொரோனா நோய் காரணமாக பலர் தமது சுய தொழில் மற்றும் ஏனைய தொழில்களையும் இழந்துள்ளதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி பட்டினியால் வாடும் அந்த மக்களுக்கு உதவிகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றனர்.
வகுப்புகளை கொவிட் 19 தடுப்பு நிலையத்தில் பதிவு செய்வது அவசியம்
ஊவா மாகாணத்தில் மேலதிக வகுப்புக்கள் நடாத்தும் ஆசிரியர்கள் மற்றும் நிறுவனங்கள் கொவிட் 19 தடுப்பு நிலையத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டியது அவசியம் என, ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம். முசாம்மில் தெரிவித்தார்.
ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே, ஆளுநர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்புக்களின் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள் மட்டும், கொவிட் 19 தாக்க சுகாதார வழிமுறைகளுக்கமைய மேற்கொள்வதற்கு துரித நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளன.
ஊவா மாகாணத்தில் மேலதிக வகுப்புக்களை நடாத்தும், நடாத்தவுள்ள ஆசிரியர்கள், வெளி மாகாணங்களுக்கு செல்லுதல் மற்றும் வெளி மாகாணங்களிலிருந்து ஆசிரியர்கள் ஊவா மாகாணத்திற்குள் பிரவேசிப்பதற்கும் முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது. இத்தடைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
இரத்தினபுரியில் கொரோனா பரவல் தீவிரம்
கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் நிறைந்த பகுதியாக இரத்தினபுரி நகரம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ குறிப்பிட்டுள்ளார்.
இரத்தினபுரி நகரில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதை அடிப்படையாக கொண்டே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இரத்தினபுரி நகரில் உள்ள 3 பாடசாலைகள் இன்றுமுதல் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை மூடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரத்தினபுரி நகரத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பள்ளிவாசல்களையும் இன்றைய தினத்தில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பள்ளிவாசல்களிலும் மக்கள் ஒன்றுகூடல் இன்றி தொழுகைகளை முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.