January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை அரசியலில் ’13 ஆம் திருத்தத்தின்’ எதிர்காலமும் இந்தியாவின் தர்மசங்கடமும்

-யோகி

இலங்கை இனப்பிரச்சனை தீர்வு முயற்சியில் பல்வேறு ஒப்பந்தங்களும், இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டிருந்தாலும் வாதப்பிரதிவாதங்களுக்கு அப்பால் ஒரு மைல்கல்லாக தற்போது வரையில் பார்க்கப்படுவது 1987ஆம் ஆண்டு ஜுலை-29 இல் மேற்கொள்ளப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தம் தான்.

இந்த ஒப்பந்தம் இரண்டு நாடுகளுக்கு இடையில், இரண்டு நாடுளின் மக்கள் ஆணை பெற்ற தலைவர்களால் கையொப்பமிடப்பட்ட சர்வதேச ஒப்பந்தம்.

ஆனால் மூன்று தசாப்தங்களும் மூன்று ஆண்டுகளும் முழுமையாக நிறைவடைந்து விட்ட நிலையில் தற்போது வரையில் இந்த ஒப்பந்தத்தின் ‘உள்கிடக்கை’ முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

வடக்கு-கிழக்கினை தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களின் ‘அபிலாஷைகளைப்’ பூர்த்தி செய்வதற்கான முயற்சியின் முதலடியாகவே இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் அரசியல் சாசனத்தின் 13ஆவது திருத்தம் அறிமுகப்படுத்திய மாகாணசபை மூலமான நன்மைகளை அனுபவித்தது என்னவோ பெரும்பான்மை சிங்கள மக்கள் தான்.

தற்போது வரையில் தமிழ் மக்களுக்கு 13 ஆவது திருத்தச்சட்டம் ‘ஏட்டுச் சுரைக்காய் தான்’. ஆனால் எதிர்வரும் காலத்தில் அதுகூட இருக்குமா என்ற கேள்வியே உருவாகியுள்ளது.

இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான பூர்வாங்க பணிகளை முன்னெடுத்துள்ளார்கள்.

தாம் விரும்பியவாறு 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிவிட்ட பின்னணியில், ஆட்சியாளர்களுக்கு புதிய அரசியலமைப்பு தேவைப்படுமா, தேவைப்பட்டாலும் அதனை இதய சுத்தியுடன் உருவாக்குவார்களா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமாக இருந்தால் அது நிச்சயமாக தமிழர்களின் முழுமையான விருப்பு வெறுப்புக்களை உள்வாங்கியதாக இருக்குமா என்ற ஐயப்பாடுகளும் இல்லாமலில்லை.

ஏற்கனவே 1972, 1978 ஆம் ஆண்டுகளில் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர்களின் பங்கேற்பின்றியே அரசியலமைப்புக்கள் உருவாக்கப்பட்ட அனுபவங்கள் உள்ளன.

தற்போதைய ஆட்சியாளர்களுக்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ள நிலையில், தமிழர் தரப்பினை ஒரு பொருட்டாகக் கொள்ளவேண்டிய தேவையும் இல்லாத நிலைமையே தெரிகின்றது.

ஆகவே தமிழர் தரப்பினையும் இணைத்துக் கொண்டு செல்ல வேண்டுமென்ற ‘நல்லெண்ணம்’ ஆட்சியாளர்களுக்கு இருந்தால் மட்டுமே புதிய அரசியலமைப்பும் தமிழர்களின் பங்களிப்பையும், அவர்களின் விருப்பு வெறுப்பினையும் உள்ளீர்த்ததாக இருக்கும்.

சரி, இத்தகைய நிலைமையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதாக இருந்தாலும், முதலாவதாக 13 ஆவது திருத்தத்தில் ஆட்சியாளர்கள் நிச்சயம் கை வைக்கப்போவது உறுதியான விடயமாகின்றது.

தற்போதைய ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில், 13 ஆவது திருத்தம் நீடித்திருப்பது இந்தியாவின் தலையீடுகளுக்கு காரணமாகின்றது, அதனால் தமக்கு அது தொடர்ந்து தலையிடியாகவே இருந்து வருகின்றது என்பதே நிலைப்பாடாக உள்ளது.

ஆகவே 13ஐ நீக்கிவிட்டால் இந்தியாவினால் இலங்கையின் அரச கட்டமைப்புக்களில் தலையீடுகளை செய்து ‘தலையிடி’ ஏற்படுத்த முடியாது என்பது அவர்களின் ‘அரசியல் கணக்காக’ உள்ளது.

இதனை நாட்டின் பொதுப் பாதுகாப்பு விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தியுள்ளார்.

மாகாணசபைகளுக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சராகவும் உள்ள அவர், மாகாணசபை முறைமையே முழுமையாக நீக்கி விட வேண்டும் என்றும் பகிரங்கமாகவே தெரிவித்து வருகின்றார்.

ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மகிந்த ஆகியோரைப் பொறுத்தவரையில், அவர்களும் இதே மனநிலையில் இருந்தாலும் அதனை ‘அரசியல் நெறிமுறையை’ கருத்திற்கொண்டு பகிரங்கப்படுத்த முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.

எனினும், காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கினால், பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் போது மாகாண அனுமதிக்காக காத்திருக்க வேண்டும். அவ்வாறு காத்திருக்கும் காலத்தில் அபிவிருத்திகள் கை நழுவிடும் என்ற தர்க்க ரீதியான கருத்தை ஜனாதிபதி கோட்டாபய வெளிப்படுத்தியுள்ளார்.

அதுமட்டுமன்றி, மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில் 68 சதவீதமானவை வீணான செலவுகளுக்குச் செல்வதாகவும் அவரது நிலைப்பாடாக உள்ளது. ஆகவே ‘வெள்ளை யானைகளாக’ இருக்கும் மாகாண சபைகளை கலைத்து விடுவதே பொருத்தமானது என்றும் திட்டமொன்றை அவர் கொண்டிருக்கின்றார்.

அத்தோடு, தற்போதுள்ளவாறே மாகாணசபைக் கட்டமைப்பை முன்னெடுக்க முடியாது அதனை மீளாய்வு செய்ய வேண்டும் என்று இந்தியாவிடமே டெல்லியில் வைத்து கூறிவிட்டார் ஜானாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.

அதேநேரம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ, ’13 பிளஸ்’ பற்றி கடந்த ஆட்சிக் காலத்தில் பேசியதை மறந்து, “பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கினால் அநுராதபுரத்தில் உள்ள மாகாபோதிக்கும், ருவன்வெலிசாயவுக்கும் செல்வதென்றால் கூட அனுமதிக்காக நான் காத்திருக்க வேண்டும்” என்று கேலியாகக் கூறியுள்ளார்.

வெவ்வேறு இடங்களில் வெளிப்பட்டிருந்தாலும், 13ஆவது திருத்தத்தின் அடி நாதமாக இருக்கும் காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதே அவர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களின் உள் அர்த்தம் என்பது தெளிவாகின்றது.

ஜனாதிபதியும் பிரதமரும் இந்த மனோநிலையில் இருக்கின்றபோது, அவர்களால் உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்பில் 13ஆவது திருத்தத்தில் காணப்படுகின்ற காணி, பொலிஸ் அதிகாரங்கள் பிடுங்கி எடுக்கப்பட்டு விடும் என்பதே உறுதியாகத் தெரிகின்றது.

அத்துடன், 13-ம் திருத்தத்தில் மத்திய-மாநில அரசுகளுக்கு பொதுவான அதிகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஒத்திசைவுப் பட்டியலும்’ களையப்பட வேண்டும் என்பது ஆளுந்தரப்பின் சட்ட ஆலோசகர்களில் ஒருவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் கருத்தாகின்றது. இந்தப் பட்டியலே ‘மத்தி’க்கும் மாகாணத்திற்கும் குழப்பங்களை ஏற்படுத்துகின்றது என்பது அவரது நிலைப்பாடு.

அவரின் கருத்தினை யார் ஏற்றுக்கொள்ளாது விட்டாலும், பிரதமர் மகிந்த நிச்சியம் நிராகரிக்க மாட்டார். அவ்வாறாயின், காணி, பொலிஸ், ஒத்திசைவுப் பட்டியல் களையப்பட்ட புதிய அரசியலமைப்பினையே எதிர்பார்க்கலாம்.

பிராந்தியத்தின் தலைமை நாடாக கருதப்படும் இந்தியாவை பகைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக ‘பெயரளவிலான 13 ஐ’ மட்டும் நீடிக்கச் செய்வதே ஆட்சியாளர்களின் தந்திரோபாயமாக அமையலாம்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் போது 13 ஆவது திருத்தத்தை முழுமையாக உள்ளீர்க்குமாறு வலியுறுத்தினால் அது இலங்கையின் ‘இறைமைக்குள்’ தலையீடு செய்வதாக காண்பிக்கப்படும்.

அவ்வாறான நிலைமை தென்னிலங்கை பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் இந்தியாவுக்கு எதிராக ஏற்கனவே இருக்கும் மனோநிலையை மேலும் ‘வன்மை’ படுத்தி எதிர்ப்பு செயற்பாடுகளுக்கு வித்திடும். அதுமட்டுமன்றி, இலங்கையும் முழுமையாக சீனாவின் பக்கம் சாய்வதற்கும் வழிகோலுவதாக அமைந்துவிடும்.

இவற்றுக்கெல்லாம் அப்பால், 13ஆவது திருத்தத்தை தமிழர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதாகவோ அல்லது இனப்பிரச்சனைக்கான தீர்வாகவோ தமிழர் தரப்பு பிரதிநிதிகளோ தற்போது வரையில் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

எனவே, 13ஐ நிடிப்பதற்கு இந்தியா அழுத்தம் கொடுத்தாலும், அது யாருக்காக என்ற கேள்வி காணப்படுகிறது. இதனால் இந்தியாவுக்கு இப்போது தர்மசங்கடமான நிலைமை தான் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில், இலங்கை 13 ஆவது திருத்தத்தை நீக்கினால் இந்தியா எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளும் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துள்ளார்.

13ஆவது திருத்தம் குறித்த இந்திய உயர்ஸ்தானிகரின் மௌனம் வெறுமனே இராஜதந்திரம் அல்ல, அது கொழும்பைத் தாண்டி டெல்லிக்கும் ஏற்பட்டுள்ள தர்மசங்கடத்தின் வெளிப்பாடும் தான்.