யாழ்ப்பாணம் மருதனார்மடம் கொரோனா கொத்தணி மூலம் சுன்னாகம், சங்கானை, திருநெல்வேலி சந்தைகளுக்கு வைரஸ் பரவியுள்ளதையடுத்து முன்னேற்பாடாக அங்குள்ள சந்தைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும் மருதனார்மடம் சந்தையுடன் தொடர்புடையதாக இதுவரையில் 76 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் நேற்று யாழ் போதனா வைத்தியசாலை, பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 588 பீசீஆர் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. யாழ் மாவட்டத்தில் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேருக்கும் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் நல்லூர், சண்டிலிப்பாய், தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பண்டாரநாயக்க விமான நிலைய ஆய்வுகூடத்திற்கு அனுப்பப்பட்ட 325 மாதிரிகளின் முடிவுகள் இன்று கிடைத்துள்ள நிலையில் அவற்றில் திருநெல்வேலி சந்தை வியாபாரியொருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் மருதனார்மடம் சந்தையுடன் தொடர்புடைய 110 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி டிசம்பர் மாதத்தில் இதுவரை வடமாகாணத்தில் 90 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்தெரிவித்துள்ளார்.
இதில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 78 பேர், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 9 பேர், மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் என்ற ரீதியில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.