July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வாழ்வாதாரம் இழந்த நிலையில் மன்னார் மீனவக் குடும்பங்கள்

அண்மையில் ஏற்பட்ட புரவி புயல் காரணமாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள பல மீனவ குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியாத  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக மீன் பிடியை வாழ்வாதாரமாகக் கொண்ட மன்னார் மாவட்ட மீனவர்களே இவ்வாறு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் மீன்பிடி உபகரணங்கள் புரவி புயலால் பாரிய சேதங்களுக்குள்ளாகியுள்ளதுடன், வலைகள், படகுகள் என்பன கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இந்நிலையில், மீனவர்களுக்கு வலை சீராக்கி கொடுத்தல் வலைகளில் எஞ்சுகின்ற மீன்களை கருவாடாக்கி விற்பனை செய்தல் போன்றவற்றினூடாக கிடைக்கும் சிறிய வருமானத்தின் மூலம் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்தும் மீனவ பெண்களின் வாழ்வாதாரம் இழக்கப்பட்டுள்ளதால் தாம் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக மீனவ பெண்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தொடரும் சீரற்ற காலநிலையினால் தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாதுள்ள காரணத்தினால் தமது வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு நிவாரணங்களையோ அல்லது மாற்று தொழில் வாய்ப்பொன்றினையோ பெற்றுத் தருமாறு மீனவ பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவ்வாறு இல்லாவிடில் வங்கிகளில் கடன் பெறுவதற்குரிய வசதிகளையாவது ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும், புரவி புயலால் பலதரப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் தம்மைப் போன்ற வறுமைக் கோட்டின் கீழ் வாழும் சுய தொழில் முயற்சியில் ஈடுபடும் அதிகமான மீனவ பெண்களின் நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் சம்பந்தப்பட்ட தரப்பினர் இந்த விடயம் தொடர்பில் கவனம் செத்தி தமக்கான தீர்வினை பெற்றுத் தருமாறு மீனவ பெண்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.