கொழும்பின் சில பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் நாளை மறுதினம் அதிகாலை 3 மணி வரையில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அந்தவகையில், கொழும்பு 01, 02, 10 மற்றும் 12 ஆகிய பிரதேசங்களில் குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த காலப்பகுதியில் கொழும்பு 03, 04, 07, 08 மற்றும் 09 ஆகிய பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
பிரதான நீர் விநியோக குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த வேலைகள் காரணமாகவே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், இதனால் இந்த காலப்பகுதியில் ஏற்படக் கூடிய அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்வதற்கு தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அந்தச் சபை பாவனையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.