November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”எந்தப் பெயரில் வந்தாலும் எம்சிசியில் இலங்கை கைச்சாத்திடாது”: அமைச்சர் மகிந்த அமரவீர

அமெரிக்காவுடனான எம்சிசி உடன்படிக்கை வேறு எந்த பெயரில் வந்தாலும் அதில் இலங்கை ஒருபோதும் கைச்சாத்திடாது என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய விடயங்களை மட்டுமே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் செய்யும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும்  20 இலட்சம் மர நடுகை வேலைத்திட்டத்தின் கீழ், ஹட்டன் காசல்ரீ நீர்தேக்கப்பகுதிக்கு அண்மித்த லெதண்டி தோட்டத்தில் இன்று நடைபெற்ற மர கன்றுகளை நடும்  நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வழங்கப்படவிருந்த 800 மில்லியன் டொலர் கொடுப்பனவை இரத்துச் செய்வதற்கு எம்சிசி நிறுவனம் தீர்மானித்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று ஹட்டனில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மகிந்த அமரவீர,

அரசாங்கம் கடந்த தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய எம்சிசி உடன்படிக்கையில் ஒருபோதும் கைச்சாத்திடாது என்றும், அது வேறு பெயரில் வந்தாலும் கைச்சாத்திடப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் இறைமைக்கும், பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவித செயற்பாடுகளிலும் ஈடுபடக் கூடாது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் இதன்போது அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த முடிவுகளால் அமெரிக்காவுடனான இலங்கையின் இராஜதந்திர உறவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

படங்கள் மரநடுகை திட்டம்

This slideshow requires JavaScript.