July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட உணவுக்கு ஒவ்வாத டின் மீன்களை சீனாவுக்கு திருப்பியனுப்ப நடவடிக்கை

File Photo

மனித நுகர்வுக்கு ஒவ்வாத, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்த 48 டின் மீன் கொள்கலன்கள்  மீண்டும் திருப்பி அனுப்புவதற்கு இலங்கை சுங்க திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தக் கொள்கலன்களில் 768 மெட்ரிக் டொன் டின் மீன்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரான மேலதிக சுங்க பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

நுகர்வுக்கு பொருத்தமற்ற டின் மீன்கள் இலங்கை சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த முறைப்பாடுகளை தொடர்ந்து, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்த நிலையில் சுங்க திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கொள்கலன்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது, மனித பாவனைக்கு ஒவ்வாத வகையிலான பொருட்கள் இந்த டின் மீன்களில் காணப்படுவதாக இலங்கை தரச்சான்றிதழ் நிறுவனம் உறுதி செய்தது.

இதனையடுத்து தனியார் நிறுவனங்கள் சிலவற்றினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ள குறித்த டின் மீன்கள் அடங்கிய கொள்கலன்களை சீனாவுக்கே திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்கள ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார்.