January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுகாதார அதிகாரிகளுக்கு போலித் தகவல்களை வழங்குவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

File Photo: Army.lk

கொவிட் பரிசோதனை நடவடிக்கைகளின் போதும், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் போதும் போலித் தகவல்களை வழங்குவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் இவ்வாறாக போலித் தகவல்களை வழங்கிய சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளதாகவும், இவ்வாறான செயற்பாடுகள் கொவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பாதிப்பாக அமைந்ததாகவும் பொலிஸ் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதனால்  இவ்வாறாக செயல்படுவோர்களுக்கு எதிராக சமூக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன்போது அவர்களின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 5 வருட கால சிறைத்தண்டனைக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் என்றும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே கொவிட் தடுப்பு நடவடிக்கைகளின் போது போலி ஆவணங்கள், போலித் தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் போதும், அல்லது வீட்டுக்கு  வெளியே செல்லும் பொழுது தமது முகவரி தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கத்தை குறிப்பிட்ட குறிப்பு கடித துண்டுகளை எப்பொழுதும் வைத்திருக்குமாறும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.