இலங்கையில் அரசியல் கைதிகளென எவரும் இல்லையெனில், இருந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் அரசியல் கைதிகளென எவரும் இல்லை என்றும், அவ்வாறு இருந்தால் ஒருவரின் பெயரையாவது கூறுங்கள் என்றும் உதயகம்மன்பில அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
நல்லாட்சியின் போது தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என அமைச்சர் உதய கம்மன்பில வெளியிட்டுள்ள கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று இராதாகிருஷ்ணன் எம்.பி இதன்போது குறிப்பிட்டுள்ளார்,
இதேவேளை கம்மன்பில கூறுவதை போன்று தற்போது அரசியல் கைதிகள் யாரும் இல்லையெனில் இருந்த கைதிகளுக்கு என்ன நடந்தது? அவர்கள் இருக்கின்றனரா? அல்லது இல்லாமல் செய்யப்பட்டுள்ளனரா? என்ற சந்தேகம் எழுகின்றது என்றும் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.