
இலங்கையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் 650 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 35,387 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 701 பேர் குணமடைந்து சிகிச்சை நிலையங்களில் இருந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக கொவிட் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,353 ஆக அதிகரித்துள்ளது.
கிறிஸ்துமஸ் ஆராதனைகளை 50 பேருடன் மட்டுப்படுத்துமாறு கோரிக்கை
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கிறிஸ்துமஸ் ஆராதனைகளை முன்னெடுக்குமாறு, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்றுநடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
கொரோனா பரவல் காரணமாக கத்தோலிக்க மக்கள் தத்தமது வீடுகளில் இருந்து மிகவும் அர்த்தபூர்வமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்றும் அவர் கோரினார்.
எனினும், தனிமைப்படுத்தப்படாத பிரதேசங்களிலுள்ள தேவாலயங்களில் 50 பேருக்கு உள்பட்டவர்களுடன் நத்தார் ஆராதனையை நடத்த முடியுமென்று பேராயர் தெரிவித்துள்ளார்.
மேல்மாகாணத்தில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு ஆராதனையை, 24 ஆம் திகதி 6 மணி முதல் ஒவ்வொரு மணித்தியாலத்தின் அடிப்படையில் சிறிய குழுக்களை கொண்டு நடத்துமாறும் அறுவுறுத்தப்பட்டுள்ளதாக கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.
பிரதான நத்தார் ஆராதனை கிறிஸ்துமஸ் தினத்தில் தொலைகாட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகும் என்றும், அதன் ஊடாக கத்தோலிக்க மக்கள் கிறிஸ்மஸ் ஆராதனையை வீட்டில் இருந்து மேற்கொள்ளுமாறும் அவர் கோரியுள்ளார்.
ஸ்ரீ லங்கன் கேட்டரிங் நிறுவனத்தில் 8 பேருக்கு கொரோனா
ஸ்ரீ லங்கன் கேட்டரிங் செயற்பாட்டு பிரிவின் பணியாளர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
பணியாளர் ஒருவருக்கு கடந்த 14 ஆம் திகதி செய்யப்பட்ட பீசீஆர் பரிசோதனையின் போது, அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
பின்னர், அவருடன் பணிபுரிந்த ஏனைய 7 பணியாளர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இவர்களுடன் பணியாற்றிய ஏனைய அலுவலக சபையினருக்கும் பீசீஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.